அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில் ஒரே நாளில் 752 பேருக்கு தொற்று - 4 பேர் பலி

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.

Update: 2023-12-23 23:00 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா தொற்று 4 ஆண்டுகளாகியும், அடுத்தடுத்து புதிதாக உருமாறி வருகிறது.

அந்தவகையில் கடந்த 28 நாட்களில் உலக அளவில் 52 சதவீதம் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. குறிப்பாக 8½ லட்சத்துக்கு மேற்பட்டோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். அதைப்போல 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது நேற்றும் உயர்ந்திருந்தது. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான முந்தைய 24 மணி நேரத்தில் 752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த மே 21-ந்தேதிக்குப்பிறகு ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகமான பாதிப்பு ஆகும்.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக கேரளாவில் 265 பேர் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறு தொற்று அதிகரிப்பதால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 3,420 பேர் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப்போல கொரோனாவுக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று முன்தினம் ஒருவர் பலியாகி இருந்த நிலையில், நேற்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் ராஜஸ்தான், கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர்.

இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,332 ஆக அதிகரித்து இருக்கிறது. அதேநேரம் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 964 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 212 ஆகும். 

Tags:    

மேலும் செய்திகள்