கடந்த 2022-ம் ஆண்டில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.7,509 கோடி வருவாய்

கடந்த 2022-ம் ஆண்டில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.7,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2022-12-31 18:45 GMT

பெங்களூரு:

ரூ.7,509 கோடி வருவாய்

தென்மேற்கு ரெயில்வேயில் கடந்த 2022-ம் ஆண்டில் கிடைத்துள்ள வருவாய் மற்றும் இதர விவரங்கள் குறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்மேற்கு ரெயில்வேக்கு கடந்த 2022-ம் ஆண்டில் ரூ.7,509 கோடி வருவாய் கிடைத்துள்ளது. தென்மேற்கு ரெயில்வே வரலாற்றில் இது தான் அதிகபட்ச ஆண்டு வருவாய் ஆகும். இதில், பயணிகள் மூலம் ரூ.2,534 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயணிகள் வருவாயிலும் இது தான் அதிகபட்சம் ஆகும். சாதாரண பயணிக்கும் அனைத்து வசதியும் கிடைக்கும் வகையில் பெங்களூருவில் உலகத்தரத்தில் சர் எம்.விசுவேஸ்வரய்யா ரெயில் முனையம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த ஜூன் மாதம் 20-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மேலும், பெங்களூரு கண்டோன்மெண்ட், யஷ்வந்தபூர் ரெயில் நிலையமும் மறு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

161 சிறப்பு ரெயில்கள்

கடந்த ஆண்டில் திருவிழா மற்றும் விடுமுறை காலங்களில் 161 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் முக்கிய ரெயில்களில் 2,585 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 91 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்துக்கு ரெயிலை இயக்குவதும், ரெயில் நிலையத்துக்கு வருவதில் இந்திய ரெயில்வேயில் 94 சதவீதத்துடன் தென்மேற்கு ரெயில்வே 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென்மேற்கு ரெயில்வேயில் சரக்கு ரெயில்களின் வேகம் 58 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் ரெயிலின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை கையாள்வதில் கடந்த 2021-ம் ஆண்டை விட கடந்த 2022-ம் ஆண்டு 70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ரெயில் நிலையங்களில் இருந்து 796 சிறுவர்களும், 323 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு ரெயில்வேயில் பெரிய அளவில் எந்த விபத்துகளும் நடக்கவில்லை.

தரமான சேவை

கடந்த 2022-ம் ஆண்டின் சாதனையை இந்த ஆண்டு (2023) முறியடிப்பது தான் நோக்கம் என்று தென்மேற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் சஞ்சீவ் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளையும், தரமான சேவையையும், நினைவில் இருக்கும் பயணத்தையும் பயணிகளுக்கு வழங்க தென்மேற்கு ரெயில்வே உறுதிப்பூண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்