74 கருக்கலைப்பு சம்பவங்கள்: தனியார் ஆஸ்பத்திரி மீது வழக்கு - சுகாதார துறை அதிரடி

பெங்களூரு அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.

Update: 2024-03-07 03:42 GMT

பெங்களூரு,

பெங்களூரு அருகே நெலமங்களாவில் 74 கருக்கலைப்பு சம்பவங்கள் நடந்த தனியார் ஆஸ்பத்திரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுகாதார துறை அதிகாரிகளின் அதிரடியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரு, மண்டியா, மைசூரு உள்பட மாநிலத்தில் பல மாவட்டங்களில் கருவின் பாலினத்தை கண்டறிந்து, அது பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்யும் சம்பவங்கள் கடந்த ஆண்டு(2023) நடைபெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மண்டியா, மைசூருவை சேர்ந்த கும்பலினர் மற்றும் தமிழ்நாடு சென்னையை சோந்த டாக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த விவகாரம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபடும் தனியார் ஆஸ்பத்திரிகள், ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, அந்த தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில ஆண்டுகளில் கர்ப்பிணியின் வயிற்றில் வளரும் கருவின் பாலினம் கணடறியும் சோதனை நடத்தி, பெண் சிசுவாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு டாக்டர்கள் கருக்கலைப்பு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆஸ்பத்திரியில் டாக்டராகவும், உரிமையாளராகவும் ரவிக்குமார் என்பவர் இருந்து வருகிறார். அவர் தான் இந்த கருக்கலைப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுவரை அந்த ஆஸ்பத்திரியில் 74 கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பதும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாகி விட்ட டாக்டர் ரவிக்குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்