32 ஆண்டுகளாக கொள்ளை வழக்கில் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தவர் 73 வயதில் கைது
மராட்டியத்தில் 32 ஆண்டுகளாக கொள்ளை வழக்கில் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்தவரை 73 வயதில் போலீசார் கைது செய்து உள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் போரிவாலி காவல் நிலையத்தில் 32 ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாத் என்ற பாலா விட்டல் பவார் என்பவர் மீது கொள்ளை வழக்கு ஒன்று பதிவானது. எனினும், அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.
இதனால், மும்பையில் உள்ள செசன்ஸ் கோர்ட்டு அவரை தேடப்படும் நபராக அறிவித்து, அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது. ஆனாலும், நீண்ட வருடங்களாக போலீசில் அவர் சிக்காமல் தப்பி வந்து உள்ளார்.
இந்நிலையில், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கல்வந்த்வாடி கிராமத்தில் அவர் வசிக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. இதனால், 2 தனிப்படைகளை அமைத்து அவரை போலீசார் தேடியுள்ளனர். எனினும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஜனவரியில் அவர் கிராமத்திற்கு வந்த தகவல் மட்டுமே போலீசாருக்கு தெரிய வந்தது. இதன்பின்னர், தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி உள்ளனர். இதில், பயந்தர் கிழக்கு பகுதியில், பேஸ்-5, இந்திரலோக் என்ற இடத்தில் அவர் இருக்கிறார் என போலீசுக்கு தகவல் சென்று உள்ளது.
இதனால், அந்த பகுதிக்கு போலீசார் விரைந்தனர். ஆனால், அவர் வீட்டை விற்று விட்டு வேறு பகுதிக்கு சென்ற விவரம் அறிந்து போலீசார் சோர்வடைந்தனர்.
இதனை தொடர்ந்து, பயந்தர் கிழக்கு பகுதியில், பேஸ்-6, இந்திரலோக் என்ற இடத்தில் விஸ்வநாத் மறைந்து இருக்கிறார் என இன்று தெரிய வந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக போலீசார் உடனடியாக சென்று அவரை தேடியுள்ளனர்.
அதன்பின் அவரது 73-வது வயதில் வாரண்டு அடிப்படையில், முதியவர் விஸ்வநாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை செசன்ஸ் கோர்ட்டில் பின்னர் ஆஜர்படுத்தி உள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, 32 ஆண்டுகளாக தனது இருப்பிடம் வெளியே தெரியாமல் மறைந்தபடி குற்றவாளி வாழ்ந்து வந்து உள்ளார். அவரது குடியிருப்பு பகுதியை தொடர்ந்து மாற்றி கொண்டே வந்தது, போலீசாருக்கு குழப்பம் ஏற்படுத்தியது என கூறியுள்ளனர். எனினும், தப்பியோடிய அந்நபரை பிடித்ததற்காக போலீசார் திருப்தி தெரிவித்து உள்ளனர்.