பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்கள்- கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்களை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-22 17:17 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்களை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

வெள்ளம் புகுந்து பாதிப்பு

கர்நாடகத்தில் வரலாறு காணாத வகையில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் ஏராளமான மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நெற்பயிர், காபி செடிகள், திராட்சை உள்பட பல்வேறு முக்கிய பயிர்கள் கனமழையால் நாசமாகி உள்ளன.

தலைநகர் பெங்களூருவில் கடந்த 17-ந் தேதி இரவு 2 மணி நேரத்தில் 114 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உரமாவு தீவுபோல் ஆனது. வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததாக பெங்களூரு மாநகராட்சி கூறியது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். அங்கு ராட்சத மோட்டார்கள் மூலம் மழை வெள்ளம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செயல்படைகள்

இதையடுத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நகரில் 3 நாட்கள் நகர்வலம் மேற்கொண்டார். அவர் ராஜராஜேஸ்வரி நகர் உள்ளிட்ட தொகுதிகளில் மழையால் பாதிக்கபட்ட இடங்கள், ராஜகால்வாய் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வெள்ளம் புகுந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் கோடியில் கால்வாய்கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்த நிலையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க 8 மண்டலங்களுக்கு தலா ஒரு செயல்படை வீதம் 8 செயல்படைகள் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார். அதன்படி 8 மந்திரிகள் தலைமையில் 8 மண்டலங்களுக்கு 8 செயல்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

கோபாலய்யா-சோமண்ணா

1. வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் - பெங்களூரு மாநகராட்சி தெற்கு மண்டலம்.

2. உயர்கல்வி மந்திரி அஸ்வத் நாராயண் - கிழக்கு மண்டலம்.

3. கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர் - ராஜராஜேஸ்வரிநகர் மண்டலம்.

4. நகர வளர்ச்சி மந்திரி பைரதி பசவராஜ் - மகாதேவபுரா மண்டலம்.

5. கலால் துறை மந்திரி கோபாலய்யா - பொம்மனஹள்ளி.

6. தோட்டக்கலை மந்திரி முனிரத்னா - எலகங்கா மற்றும் தாசரஹள்ளி மண்டலம்.

7. வீட்டு வசதி துறை மந்திரி சோமண்ணா - மேற்கு மண்டலம்.

இந்த குழுக்களில் அந்தந்த தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பெங்களூரு மாநகராட்சி மண்டல கமிஷனர்கள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. மண்டல துணை கமிஷனர்கள் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.

இந்த செயல்படைகள் உடனடியாக தங்கள் பணியை தொடங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அதன்பேரில் அந்த செயல்படைகள் செயல்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்