இளநிலை உதவியாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 7 பேர் கைது
இளநிலை உதவியாளர் பதவிக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெலகாவி:
21 மையங்களில்...
கர்நாடக மின் பரிமாற்று நிறுவனத்தில் காலியாக இருந்த இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு கடந்த 7-ந் தேதி நுழைவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 21 மையங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக கதக், உத்தர கன்னடா மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த மையங்களில் இந்த முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த கதக் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் கல்லூரி துணை முதல்வர் மாருதி சோனவானே, அவரது மகன் சமித்குமார் மற்றும் அமரேஷ் சந்திரா ராஜூர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த முறைகேட்டில் 10-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது உறுதியானது.
தொழில்நுட்ப கருவிகள்
இதையடுத்து கோகாக் தாலுகாவில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், விசாரணையில் 'ஸ்மார்ட் வாட்ச், புளுடூத்' போன்ற தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தியது தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் 3 குழுக்கள் ஈடுபட்டதும், இதனை பெலகாவி மாவட்டம் சிரஹள்ளி கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து நடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பேராசிரியர்கள் உதவியுடன்...
சமித்குமார் தேர்வு மையத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்த வினாத்தாள்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அவர் அதனை 3 குழுக்களுக்கும் அனுப்பி, பேராசிரியர்கள் சிலரின் உதவியுடன் விடைகளை பெற்று அதனை தேர்வர்களுக்கு மீண்டும் வழங்கி உள்ளார். இதற்காக பேராசிரியர்கள் சிலருக்கும் பணம் கொடுத்துள்ளனர்.
இந்த முறைகேட்டில் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இதில் தொடர்புடைய பேராசிரியர் ஒருவர் விரைவில் கைது செய்யப்படுவார். இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 9 பேரில் இருவர் எஸ்.ஐ. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.