ஒடிசாவில் படகு கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-20 06:54 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றில் சுமார் 50-க்கும் அதிகமானோரை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 35 வயது பெண் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. மேலும் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த மீட்பு பணியில் உதவுவதற்காக புவனேஸ்வரில் இருந்து ஸ்கூபா நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை சுமார் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயா கோயல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்