போலி கால்சென்டர் நடத்தி வந்த 6 பேர் கைது
பெங்களூருவில், போலி கால்சென்டர் நடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பெங்களூரு: பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் உள்ள டெக்பார்க் வளாகத்தில் போலி கால்சென்டர் நிறுவனம் நடந்து வருவதாக மகாதேவபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கால்சென்டருக்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது குஜராத்தை சேர்ந்த 6 பேர் போலி கால்சென்டர் நிறுவனம் நடத்தி வந்ததும், அங்கு 80 பேர் வேலை செய்ததும் தெரியவந்தது. அமேசானில் கணக்கு வைத்திருப்பவர்களை கால்சென்டர் ஊழியர்கள் தொடர்பு கொண்டு வேலை வாங்கி தருகிறோம் என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலி கால்சென்டர் நிறுவனம் நடத்தி வந்த குஜராத்தை சேர்ந்த 6 பேரை மகாதேவபுரா போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 132 கம்ப்யூட்டர்கள், ரூ.15 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைதான 6 பேர் மீதும் மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.