வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது
கலபுரகி அருகே, வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கலபுரகி: கலபுரகி அருகே, வாலிபர் கொலையில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெயிண்டர் கொலை
கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சுக்ரவாடியை சேர்ந்தவர் தயானந்த் (வயது 26). இவர் துபாயில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தயானந்த் சுக்ரவாடிக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலபுரகிக்கு சென்ற தயானந்த் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
இதுகுறித்து பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தயானந்த்தை கொலை செய்ததாக சுக்ரவாடி கிராமத்தை சேர்ந்த அனில், கிருஷ்ணா, நீலகண்டா, சுரேஷ், சந்தோஷ், யாதகிரியை சேர்ந்த அம்பிகா ஆகிய 6 பேரை பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தயானந்த், அனிலுக்கு இடையே இருந்த சொத்து பிரச்சினையில் கொலை நடந்தது தெரியவந்தது.
வீடியோ வைரல்
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, சொத்து பிரச்சினை தொடர்பாக தயானந்த்தை கொலை செய்ய அனில் திட்டமிட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு அம்பிகாவின் பழக்கம் கிடைத்தது. அவரிடம் தயானந்த் செல்போன் நம்பரை அனில் கொடுத்து உள்ளார். அனிலை எப்படியாவது உனது வலையில் வீழ்த்திவிடு என்று கூறி அம்பிகாவுக்கு, அனில் ரூ.3 லட்சம் கொடுத்து உள்ளார்.
பின்னர் தயானந்தின் செல்போன் எண்ணுக்கு அம்பிகா அழைத்து பேசி உள்ளார். பின்னர் அனிலிடம் உன்னை காதலிப்பதாகவும், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறி கலபுரகிக்கு வர கூறியுள்ளார். அதன்படி கலபுரகிக்கு சென்ற தயானந்தை, அனில், கிருஷ்ணா, நீலகண்டா, சுரேஷ், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்திக்கொலை செய்து உள்ளனர். தயானந்தை கொலை செய்யும் காட்சிகளை அம்பிகா தனது செல்போனில் வீடியோவும் எடுத்து உள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.