உத்தர பிரதேசம்: பனிமூட்டம் காரணமாக சாலை விபத்துகளில் 6 பேர் பலி, பலர் காயம்
வட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
லக்னோ,
நாட்டின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. பனிமூட்டம் அதிக அளவில் காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் புகைமூட்டம்போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப்,உத்தரபிரதேசம்,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. வட மாநிலங்களில் வருகிற 31-ம் தேதி வரை மூடு பனியின் தாக்கும் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், உத்தரபிரதேசத்தில் இன்று கடும் பனி மூட்டம் காரணமாக நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பாக்பத், ஆக்ரா, உன்னவ் ஆகிய இடங்களில் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனிமூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்களை இயக்கியதை காண முடிந்தது.