இமயமலையில் ஹெலிகாப்டர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

நேபாளத்தில் இமயமலையின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.

Update: 2023-07-11 19:56 GMT

கோப்புப்படம்

காத்மாண்டு,

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'மனாங் ஏர்' என்ற நிறுவனம் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டரில் பறந்தபடி இமயமலை சிகரங்களை கண்டு ரசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

அந்த வகையில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மனாங் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான 'என்ஏ-எம்வி' ரக ஹெலிகாப்டரில் இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்க்க சென்றனர்.

காத்மாண்டுவுக்கு புறப்பட்டது

3 பெண்கள் உள்பட 5 பேர் சென்ற இந்த ஹெலிகாப்டரை நேபாளத்தை சேர்ந்த விமானி சேட் பகதூர் குருங் என்பவர் இயக்கினார்.

இமயமலை சிகரங்களை சுற்றிப்பார்த்த பிறகு, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10 மணியளவில் நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில் இருந்து காத்மாண்டு நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டது.

6 பேர் உயிரிழப்பு

கிளம்பிய 15 நிமிடங்களுக்குள், 12,000 அடிக்கு மேல் உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது. இதனைத் தொடர்ந்து மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த நிலையில், இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே மலையில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

விபத்துக்கு காரணம் என்ன?

விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை.

அதே சமயம் மோசமான வானிலையால் விபத்து நேரிட்டு இருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்