பயணிகள் போக்குவரத்தில் ரூ.5,779 கோடி வருவாய் - தெற்கு ரெயில்வே தகவல்

2022-23 நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-05 00:49 GMT

சென்னை,

தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது;-

"தெற்கு ரெயில்வே கடந்த 2022-23 நிதியாண்டில் ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை, 58.26 கோடி பயணிகளை சுமந்து பயணித்துள்ளது மற்றும் ரூ.5,779 கோடி வருவாயை ஈட்டியுள்ளது.தெற்கு ரெயில்வே 2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான (2022-2023 நிதியாண்டில்) உற்பத்தி சரக்குகள் 3 கோடி 39 லட்சம் டன்கள் கொண்டு சேர்த்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் 2 கோடி 74 லட்சம் டன் ஆக இருந்த சரக்கு போக்குவரத்து 24 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரெயில்வே வாரியத்தின் இலக்கான 3 கோடியே 22 லட்சம் டன்னைவிட இது 5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஏப்ரல்-பிப்ரவரி 2023 வரை சரக்கு ரெயில் போக்குவரத்தில் ரூ.3,230.40 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது.

தெற்கு ரெயில்வே, பயணிகளின் தோழமை மண்டலமாக செயல்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டின் (2021-22) தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல்-பிப்ரவரி 2023-ல் (2022-23 நிதியாண்டில்) பயணிகள் போக்குவரத்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மேலும் தெற்கு ரெயில்வே கடந்த ஆண்டு தமது மொத்த பயனாளர்களுக்கு வழங்கிய சேவை (29.26 கோடி பயணிகள்) அளவைக் காட்டிலும் ஏப்ரல்-பிப்ரவரி 2023 காலகட்டத்தில் சேவையை இரட்டிப்பாக்கி, 58.26 கோடி பயணிகளுக்கான சேவையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணிகளின் வழியாக ரூ.5,779 கோடி வருவாயை ஈட்டியுள்ளது."

இவ்வாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்