பெங்களூருவில் வெளிவட்ட சாலைகளில் 562 விபத்துகள் நடந்து உள்ளன
பெங்களூருவில் கடந்த 9 மாதங்களில் வெளிவட்ட சாலைகளில் 562 விபத்துகள் நடந்து உள்ளன.
பெங்களூரு:
வெளிவட்ட சாலைகள்
பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதாவது விமான நிலையம் உள்பட முக்கியமான இடங்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி செல்லும் வகையில் இந்த சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவட்ட சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக வெளிவட்ட சாலைகளில் விபத்துகள் அதிகரித்து உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில் வெளிவட்ட சாலைகளில் 622 விபத்துகளும், 2021-ம் ஆண்டு 618 விபத்துகளும் நடந்து உள்ளன. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் 562 விபத்துகள் நடந்து உள்ளன. இதில் பெரும்பாலான விபத்துகள் பல்லாரி ரோடு, ஓசூர் ரோட்டில் தான் நடந்து உள்ளன.
வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
வெளிவட்ட சாலைகள் செல்லும் இப்லூர் சந்திப்பு, ஹெண்ணூர் சுரங்கபாதை, பாபுசாப்பாளையா, பாகேமனே டெக் பார்க், மாரத்தஹள்ளி, மகாதேவபுரா பகுதிகள் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. இதுபோல பல்லாரி ரோட்டில் ஜக்கூர், எலகங்கா புறவழிச்சாலை, கண்ணமங்களா பாளையா கேட், உனசமாரனஹள்ளி, பெட்டதஅல்சூர் ஜங்ஷன், கோடிகனஹள்ளி கேட்டும் விபத்துகள் அடிக்கடி நடக்கும் பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது.
ஓசூர் ரோட்டில் பொம்மனஹள்ளி ஜங்ஷன், கூட்லு கேட், சிங்கசந்திரா, கார்கேவிபாளையா, கோனப்பன அக்ரஹாரா, எலெக்ட்ரானிக் சிட்டி பஸ் நிலையம், வீரசந்திரா ஜங்ஷன் ஆகிய பகுதிகள் விபத்து நடக்கும் இடங்களாக அறியப்பட்டு உள்ளன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, நாங்கள் வெளிவட்ட சாலையில் 60-க்கும் மேற்பட்ட இடங்களை விபத்து நடக்கும் பகுதியாக கண்டறிந்து அந்த பகுதியில் மெதுவாக செல்லும்படி அறிவிப்பு பலகை வைத்து உள்ளோம். ஆனால் வாகன ஓட்டிகள் யாரும் மெதுவாக செல்வது இல்லை. இதனால் தான் விபத்துகள் நடக்கிறது. வேகமாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகிறோம் என்றனர்.