போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்ட ஆட்டோவை எடுக்குமாறு கூறிய நபர் அடித்துக்கொலை
போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்பட்ட ஆட்டோவை எடுக்குமாறு கூறியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராமின் சுபாஷ் நகரை சேர்ந்த மொல் சந்த் வர்மா (வயது 56) திங்கட்கிழமை மாலை 7.15 மணியளவில் அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
துனுக் மார்க்கெட் சாலையில் பைக்கில் சந்த் வந்துகொண்டிருந்தபோது சாலையில் ஒரு ஆட்டோ நிறுத்தப்பட்டிருந்தது. அந்த ஆட்டோ சாலையில் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால், மொல் சந்த் வர்மா அந்த ஆட்டோ டிரைவரிடம் ஆட்டோவை சாலையில் இருந்து நகர்த்துமாறு கூறினார். அப்போது அவருக்கும் ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை மொல்சந்த் உடைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தனது நண்பனுடன் சேர்ந்து மொல்சந்தை கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மொல்சந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர் அங்கிருந்து தப்பியோடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் அரவிந்த் குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.