பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52% பேர் முன்பே அறிமுகம் ஆனவர்கள்; போலீசார் அறிக்கை

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் 52 சதவீதத்தினர் பாதிப்படைவோருக்கு நன்கு தெரிந்தவர்களாக உள்ளனர் என இமாசல பிரேதச போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Update: 2022-10-11 02:29 GMT


சிம்லா,


பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பற்றி இமாசல பிரேதச போலீசார் வெளியிட்டு உள்ள ஆய்வு அறிக்கை ஒன்று அதிர்ச்சி தெரிவிக்கின்றது. 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் இதுவரை என கடந்த 3 ஆண்டுகளில் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பற்றி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக, 895 வழக்குகள் மாநிலத்தில் பதிவாகி உள்ளன. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோர் பெருமளவில், பாதிக்கப்படுபவர்களுக்கு முன்பே நன்றாக தெரிந்த நபர்களாக உள்ளனர் என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதன்படி, 52.4 சதவீத பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நன்கு தெரிந்தவர்களே குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர, நட்பின் வழியே அறிமுகம் ஆனவர்களால் 24.4 சதவீதமும், திருமணம் என்ற பொய்யான வாக்குறுதிகளின் பேரில் 16.9 சதவீதமும், லிவிங் டுகெதர் எனப்படும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும்போது 4.1 சதவீதமும் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் 2 சதவீதமும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவற்றில் மேலே குறிப்பிடப்பட்ட பல வழக்குகள், சம்பவங்களை நடக்க விடாமல் முன்பே தவிர்க்க கூடிய வகையை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆழ்ந்த வருத்தத்திற்கு உரியது என இமாசல பிரேதச டி.ஜி.பி. வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்