சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன், சூரியகாந்தி எண்ணெயின் அடிப்படை இறக்குமதி வரி 5% குறைப்பு
திருத்தப்பட்ட சுங்க வரி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன்ஸ் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி சுத்திகரிக்கப்பட்ட சோயா பீன் எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 17.5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாகக் குறைப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த திருத்தப்பட்ட சுங்க வரி விகிதங்கள் ஜூன் 15-ந்தேதி(இன்று) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் உள்நாட்டு சந்தையில் நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக விளங்கும் சமையல் எண்ணெயின் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.