கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: வீடு மண்ணில் புதைந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..!
இடுக்கி அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தற்போது பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையோர மாவட்டங்களில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில், இடுக்கி மாவட்டம், தொடு புழாவை அடுத்த காஞ்ஞாரில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது.
இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (வயது 53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் (4) சோமனின் தாயார் தங்கம்மா (70) ஆகிய 5 பேரும் மண்ணில் புதையுண்டு பலியானார்கள்.
நிலச்சரிவில் வீடு புதையுண்ட சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் அடங்கிய குழு நவீன இயந்திரங்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணி தொடங்கியது.
வருவாய் துறை மந்திரி ராஜன், டீன் குரியாகோஸ் எம்.பி, மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ், உதவி கலெக்டர் பி.ஜேக்கப், வருவாய் துறை அதிகாரி ஷாஜி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
முதலாவதாக, தங்கம்மாவின் உடல் மீட்கப்பட்டது. அதை தொடர்ந்து பச்சிளம் குழந்தை தேவானந்த் உடலை மீட்பு படையினர் கண்டு பிடித்து மீட்டனர். பின்னர் விடியற்காலையில் மோப்ப நாயின் உதவியுடன், சோமன், அவரது மனைவி ஷிஜி, மகள் ஷிமா ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டது.
முன்னதாக மண்ணில் புதையுண்ட வீட்டின் அருகே விசித்து வந்த 5 குடும்பங்களும் குடயத்தூர் அரசு பள்ளிக்கூடத்திற்கு மாற்றப்பட்டனர்.