லாரி-கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாவு

லாரி-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.;

Update: 2022-08-15 21:49 GMT

பீதர்: பீதர் அருகே, லாரி-கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.

5 பேர் சாவு

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பங்கூர் கிராமத்தில் நேற்று மதியம் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. விபத்து பற்றி அறிந்ததும் பீதர் புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.

அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததும், 5 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியதும் தெரியவந்தது. உடனடியாக 5 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதுபோல உயிரிழந்த 5 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவிலுக்கு சென்றனர்

விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த தினேஷ், ஸ்ரீதர், அனிதா, பிரியா உள்பட 5 பேர் என்பதும், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. காரில் 10 பேரும் கலபுரகி மாவட்டம் கமலபுராவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற போது விபத்து நடந்ததும் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து பீதர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்