மங்களூருவில் அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி

ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.;

Update: 2023-09-29 18:45 GMT

மங்களூரு-

ஆன்லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக கூறி அழகுக்கலை பெண் நிபுணரிடம் ரூ.5½ லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் மங்களூருவில் நடந்துள்ளது.

அழகுக்கலை நிபுணர்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கொடிப்பாடு கிராமம் அருகே பட்ரப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கனகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அழகுக்கலை நிபுணர் ஆவார். மேலும் இவர் அப்பகுதியில் தனியாக அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கு தபால் மூலம் பரிசுக்கூப்பன் ஒன்று வந்தது. அதை அவர் திறந்து பார்த்தபோது அதில் 2 செல்போன் எண்கள் இருந்தன.

அதில் தொடர்பு கொண்டு கனகா பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் உங்களுக்கு ஆன்லைன் லாட்டரி மூலம் ரூ.11 லட்சம் பரிசு கிடைத்திருக்கிறது. அந்த பணத்தை நீங்கள் பெற ரூ.11 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மோசடி

அதை நம்பிய கனகா அவர் கூறிய வங்கி கணக்கிற்கு 'போன்-பே' செயலி மூலம் ரூ.11 ஆயிரம் செலுத்தினார். அதையடுத்து பல்வேறு காரணங்களை கூறி கனகாவிடம் இருந்து மர்ம நபர்கள் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 500-ஐ ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் பெற்றுக் கொண்டனர். மேற்கொண்டும் அவர்கள் கனகாவிடம் பணம் கேட்டுள்ளனர். அப்போது தான் மோசடி வலையில் சிக்கியதை கனகா உணர்ந்தார்.

பின்னர் இதுபற்றி அவர் புத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்