கர்நாடக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி கர்நாடக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-12-15 20:31 GMT

பெங்களூரு:-

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்

கர்நாடகத்தில் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்காக வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வராலே முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாத்துகளில் உள்ள வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு செய்வதற்காக பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும், ஐகோர்ட்டில் நடைபெறும் பொதுநல வழக்கில் தங்களை எதிர்தரப்பில் சேர்க்க வேண்டும் என்று கோரி கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் 3 மாதம் காலஅவகாசம்

அதே நேரத்தில் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதற்காக வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடிக்க மேலும் 3 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று கோரி பஞ்சாயத்து ராஜ் துறை சார்பிலும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி.வராலே முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் ஆஜரான வக்கீல், வார்டு வரையறை பணிகள் மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடிக்க மேலும் 3 மாதம் காலஅவகாசம் வழங்க வேண்டும், இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்க வேணடும் என்று வாதிட்டார்.

அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

அந்த சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதற்காக வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடிக்க 12 வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த 12 வார அவகாசத்தில் தேர்தலை நடத்துவதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. தற்போது வார்டு வரையறை, இடஒதுக்கீடு பணிகளை முடிக்க கூடுதலாக 12 வாரங்கள் கேட்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் புல்லை மேயும் பசுவை போன்று இருக்கிறது. தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருவதால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. பஞ்சாயத்து ராஜ் துறை கேட்டு கொண்டதன் பேரில் 3 மாதம் காலஅவகாசம் அளிக்கப்படாது.

பிப்ரவரி 1-ந் தேதிக்குள்...

பிப்ரவரி 1-ந் தேதிக்குள் மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தலை நடத்துவதற்கான வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடுவை முடிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை பஞ்சாயத்து ராஜ் துறை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களை எதிர்தரப்பில் சேர்க்க கோர்ட்டு அனுமதி அளிக்கிறது, என்று உத்தரவு பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்