மராட்டியத்தில் பட்டாசு ஆலை விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலி 25 தொழிலாளர்கள் காயம்
பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பார்சி தாலுகாவில் உள்ள சிராலா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்துகொண்டு இருந்தது.
இந்த நிலையில் ஆலையில் உள்ள பட்டாசு தயாரிக்கும் பகுதியில் பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலை கட்டிடம் சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் தீ பற்றியும் எரிந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர விபத்தில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதில் 5 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் 25 காயம் அடைந்தனர்.
இதேபோல் நாசிக் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். 16 பேர் காயம் அடைந்தனர்.