சென்னையில் இருந்து நெல்லூருக்கு காரில் கடத்தப்பட்ட 5 கிலோ தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது
காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
அமராவதி,
ஆந்திராவின் சில பகுதிகளில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் சென்னையில் இருந்து கார்கள் மூலமாக ரசீது இல்லாமல் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்.பி.பரமேஸ்வர ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் சூளூர்பேட்டை போலீசார் சென்னையில் இருந்து நெல்லூர் செல்லும் வழியில் உள்ள சூளூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்த போது அவற்றில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ தங்க பிஸ்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை ரசீது இல்லாமல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கடத்தல் தங்கம் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.