ஜம்மு பயங்கரவாத தாக்குதல்: உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்வு

ஜம்முவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.;

Update: 2024-07-08 22:53 GMT

ஸ்ரீநகர்,

ஜம்முவின் கத்துவா மாவட்டம் மச்சேதி பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. மலைப்பாங்கான பகுதியில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது அதை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மலைப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப்படை வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

எனினும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப்படையினர் விரைந்தனர். மேலும், படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் ஒரு ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஜம்மு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தாக்குதல் நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மலைப்பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்