20 அடி பள்ளத்தில் கார் விழுந்து 5 பேர் படுகாயம்
சார்மடி மலைப்பாதையில் 20 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு:-
கோலாரை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே அருகே சார்மடி மலைப்பாதையில் மலையமருதா பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்தது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்தது. இருப்பினும் காரில் பயணம் செய்தவர்களுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பலத்த காயமடைந்த 5 பேருக்கு உயிருக்காக போராடி கொண்டிருந்தனர்.
அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் போலீசார், கிரேன் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த காரை மீட்டனர்.