வாட்ஸ்அப்பில் 5 வண்ணங்கள்...!! புது வசதி விரைவில் அறிமுகம்

ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு வசதியை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

Update: 2024-01-11 05:29 GMT

புதுடெல்லி,

பொதுமக்கள் தங்களுடைய செய்திகளை பரிமாற்றம் செய்ய என்று எஸ்.எம்.எஸ். வசதி முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அது இன்னும் செயல்பாட்டில் உள்ளது. எனினும், செய்திகளுடன், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ள கூடிய பல்வேறு நவீன வசதிகள் கொண்ட வாட்ஸ்அப் வந்ததும் மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

வாட்ஸ்அப் சாட்டிங் பிரபலமடைந்தது. இதில், மணிக்கணக்கில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும். தகவல்கள் பாதுகாப்பான முறையில் சென்று சேரும் உத்தரவாதமும் அளிக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப் பயனாளர்கள் உபயோகத்திற்காக, மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதிய விசயங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, பல வண்ணங்களுடன் புதிய தீம்களுக்கான வசதியை விரைவில் அறிமுகப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பச்சை, நீலம், வெண்மை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய 5 வண்ணங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. பயனாளர்கள் அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அவர்களுடைய செயலியில் காணப்படும் வண்ணத்தில் இருந்து தேவையான வண்ணத்திற்கு மாற்றி கொள்ளலாம்.

இந்த புதிய மாற்றங்களால், பின்னணி பார்ப்பதற்கு வண்ண மயத்துடன் இருக்கும். பார்வை குறைபாடு உள்ளவர்கள் அல்லது குறிப்பிட்ட வண்ணங்களை தேர்வு செய்ய விரும்புபவர்களுக்கு உதவியாக, இந்த வண்ணங்களை தேர்வு செய்யும் வசதி இருக்கும்.

அந்த நிறம் அவர்களுடைய ஆளுமையை பிரதிபலிக்கும் வகையிலோ அல்லது அந்த செயலியை பார்க்க ஆவலை தூண்டும் வகையிலும் கூட இருக்கும். இதேபோன்று, ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட சாட்டிங் வரலாறு ஆகியவற்றை இலவச கூகுள் டிரைவ் சேமிப்பு பகுதியில் வைத்து கொள்ளும் வசதியை முடிவுக்கு கொண்டு வர வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது.

இதனால் கூகுள் டிரைவில் சேமிக்கப்படும் வாட்ஸ்அப் தரவுகள், 15 ஜி.பி. என்ற சேமிப்பு வரம்புக்குள் கொண்டு வரப்படும் அல்லது பயனாளர்கள், கூகுள் ஒன் சந்தாதாரர்களாகும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்