வாகன திருட்டு வழக்கில் 5 பேர் கைது
பெங்களுருவில் வாகன திருட்டு வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 72 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
பெங்களூரு:-
72 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தும் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வந்தன. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பெங்களூரு நகரில் திருடப்பட்டு வந்த மோட்டார் சைக்கிள்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை பொம்மனஹள்ளி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 72 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
5 பேர் மீது வழக்கு
விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் உள்ள வீடுகள் முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி, அவற்றை தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்று குறைந்த விலைக்கு விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை சுமார் ரூ.40 ஆயிரத்திற்கும் குறைவாக விற்றுள்ளனர்.
இதனால் அவர்களிடம் பலரும் மோட்டார் சைக்கிள்களை வாங்கி உள்ளனர். மோட்டார் சைக்கிள்களுக்கான ஆவணங்கள் குறித்து கேட்கும் நபர்களிடம், கடன் தொடர்பாக அவற்றை வங்கியில் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அதை வாங்கி தருவதாகவும் கூறி விற்றுள்ளனர். இவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதன் மூலம் பெங்களூரு நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தீர்வு கிடைத்துள்ளதாக போலீசார் கூறினர். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.