குடகில் தகுதியற்ற 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து
குடகில் விதிமுறையை மீறி பயன்படுத்தப்பட்ட 4,651 பி.பி.எல். ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ரூ.7¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.;
குடகு:-
பி.பி.எல். ரேஷன் கார்டு
கர்நாடகத்தில் அரசின் சலுகைகள் மற்றும் ரேஷன் பொருட்கள் பெருவதற்கு ஏ.பி.எல். பி.பி.எல். கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பி.பி.எல். கார்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏ.பி.எல். கார்டு வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பி.பி.எல்.கார்டு வைத்திருப்பர்களுக்கு கூடுதல் ரேஷன் பொருட்கள் மற்றும் அரசின் சில சலுகைகள் பெற வசதி உள்ளது. ஏ.பி.எல். கார்டுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே ரேஷன் பொருட்கள் பெற முடியும்.
குறிப்பாக இந்த பி.பி.எல். ரேஷன் கார்டு பெறுவதற்கு சில தகுதிகள் உள்ளது. அதாவது 3 எக்டேருக்கு மேல் நிலம் இருக்க கூடாது. அரசு பணியில் இருக்க கூடாது. வரிமான வரி செலுத்துபவர்கள், ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்களுக்கு இந்த பி.பி.எல். கார்டு கிடையாது. அவர்களுக்கு ஏ.பி.எல். கார்டு வழங்கப்பட்டு வருகிறது.
4,651 ரேஷன் கார்டுகள்
இந்தநிலையில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் இந்த பி.பி.எல்.கார்டுகளை பயன்படுத்தி வருவதாக உணவு மற்றும் பொது வினியோகத்துறைக்கு புகார் வந்தது. அதன்படி அந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் விதிமுறையை மீறி பி.பி.எம்.கார்டு வாங்கி பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்தநிலையில் குடகு மாவட்டத்தில் தகுதியில்லாதவர் பி.பி.எல். கார்டு தாரர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வந்தது. அதன்படி நடந்த ஆய்வில் குடகு மாவட்டத்தில் மட்டும் 4,651 பேர் விதிமுறையை மீறி பி.பி.எல். கார்டு வாங்கியிருப்பது தெரியவந்தது. இதில் மடிகேரி தாலுகாவில் 1,221 பேர், சோமவார்பேட்டையில் 1,968, விராஜ்பேட்டையில் 1,462 பேர் விதிமுறையை மீறி பி.பி.எல். கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
ரூ.7¾ லட்சம் பறிமுதல்
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்த பி.பி.எல்.கார்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை ரத்து செய்ததுடன், அபராதம் விதித்துள்ளனர். அதன்படி குடகு மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் சேர்த்து ரூ.7¾ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டிருப்பதாக உணவு மற்றும் பொதுவினியோகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.