45 கோடி இந்தியர்கள் வெவ்வேறு ஒவ்வாமைகளால் அவதி - மருத்துவ நிபுணர்கள்

45 கோடி இந்தியர்கள் வெவ்வேறு விதமான ஒவ்வாமை பிரச்சினைகளாலும், தூக்க பிரச்சினைகளாலும் அவதிப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2022-10-15 20:45 GMT

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்று, அலர்ஜி என்று அழைக்கப்படக்கூடிய ஒவ்வாமை ஆகும்.

ஒவ்வாமை ஏன்?

சுற்றுச்சூழலில், உணவுப்பொருட்களில், அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிற பொருட்களில் உள்ள ஒவ்வாப்பொருட்களால் இந்த ஒவ்வாமை பாதிப்பு ஏற்படுகிறது. ஏதேனும் சிறிய பூச்சிகள் கடித்தால், காலநிலை மாற்றத்தால்கூட ஒவ்வாமை தொல்லை அவதியைத் தரும். மகரந்தம், தாவரங்கள் ஏன் சில மருந்துகள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்துவது உண்டு.

45 கோடி இந்தியர்கள் பாதிப்பு

இந்த நிலையில், நமது நாட்டில் 45 கோடி இந்தியர்கள் வெவ்வேறு விதமான ஒவ்வாமை பிரச்சினைகளாலும், தூக்க பிரச்சினைகளாலும் அவதிப்படுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவ நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஒவ்வாமையில் உணவுப்பொருட்கள் ஏற்படுத்துவது 25 சதவீதம் ஆகும். உணவுப்பொருட்கள்தான் ஒவ்வாமை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம்.

ஐதராபாத்தில் தெலுங்கானா வர்த்தக சபையில், அதன் முன்னாள் தலைவர் சுராஜ் பிரசாத் அகவர்வால் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில்தான் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீட்டுச்சூழல்

இதில் மருத்துவ நிபுணர்கள் வெளியிட்ட முக்கியமான தகவல்கள் இவை:-

* பெரும்பாலான நோய்கள் இப்போது வீக்கம் காரணமாக ஏற்படுகிறது. இவை கீல்வாதம், புற்றுநோய், அல்சைமர் நோய், டிமென்ஷியா, மனச்சோர்வு உள்ளிட்டவை ஆகும்.

* வீட்டுச்சூழலில் ஒவ்வாமையை தடுக்கவும் வழிகள் உண்டு. உங்கள் செல்லப்பிராணிகளை ஒழுங்காகக் குளிப்பாட்டி வாருங்கள். அவற்றை படுக்கயைறைக்குள் விடாதீர்கள். சோபாக்களில் அமர விடாதீர்கள்.

* பெரும்பாலோருக்கு ஏற்படுகிற ஒவ்வாமை, தூசிப்பூச்சிகளால் ஏற்படுகின்றதாம். இது வெப்பத்தால் அழிக்கப்படுமாம்.

தடுக்க வழி

* ஒவ்வாமையை தடுக்க மற்றொரு முக்கியமான செயல், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை 130 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் உள்ள சுடுநீரில் சலவை செய்ய வேண்டும். அவற்றை நல்ல வெயிலில் உலர வைக்க வேண்டும்.

* பூஞ்சையினால் ஏற்படுகிற ஒவ்வாமையைத் தடுப்பதற்கு குளியலறையில் உள்ள அச்சுகள் மற்றும் கசிவு பகுதிகளை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும். நீர்ப்புகா காப்பு மற்றும் சேதமடைந்த குழாய்களை மாற்றியமைக்க வேண்டும், தவிர ஏர் கண்டிஷன் 'வென்ட்'களை தவறாமல் கழுவ வேண்டும்.

* மகரந்த ஒவ்வாமையைத் தவிர்க்க, அதிகாலையிலும் மாலையிலும் குளித்துவிட்டும், நடைபயிற்சி முடிந்த உடனேயேயும் துணிகளை துவைக்க வேண்டும்.

இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்