எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவக்குமார் உள்பட ஒரே நாளில் 421 பேர் வேட்பு மனு தாக்கல்; தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டது
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட நேற்று ஒரே நாளில் குமாரசாமி, டி.கே.சிவக்குமார் உட்பட 421 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது.
பெங்களூரு:
வேட்பாளர்கள் குவிந்தனர்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 221 வேட்பாளர்களும், 2-வது நாளில் 200 வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. இந்த நிலையில் ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு மனு தாக்கல் நேற்று மீண்டும் தொடங்கியது.
காலை 11 மணிக்கு மனு தாக்கல் தொடங்கியதும், வேட்பாளர்கள் சாரை சாரையாக வந்து மனுக்களை தாக்கல் செய்தனர். தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் குவிந்ததால், தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக காணப்பட்டன. முக்கியமாக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுராவில் அங்குள்ள தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார்.
குமாரசாமி
முன்னதாக அவர் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். அவரை ஆதரவாளர்கள் தோளில் தூக்கி வந்து குதூகலப்படுத்தினர். முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி, ராமநகர் மாவட்டம் சன்னபட்டணா தொகுதியில் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த தேர்தல் அதிகாரியிடம் நேற்று மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தனது கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், சன்னபட்டணா நகரம் குலுங்கியது.
அதே போல் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகர் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தனது தாத்தாவான முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தார்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி சார்பில் அவரது மனைவி சிவலீலா மனு தாக்கல் செய்தார்.
பா.ஜனதா பிரமுகர் லோகேஷ் கொலை வழக்கில் வினய் குல்கர்னிக்கு ஜாமீன் வழங்கியுள்ள சுப்ரீம் கோர்ட்டு, தார்வாருக்குள் நுழைய தடை விதித்துள்ளது. அதனால் அவரால் தார்வாருக்குள் நுழைய முடியவில்லை. தான் தேர்தலில் போட்டியிட உள்ளதால் தார்வாருக்குள் நுழைய அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வினய் குல்கர்னி மனு தாக்கல் செய்துள்ளார்.
சோமண்ணா மனு
மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வி.சோமண்ணா மனு தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடன் இருந்தார். அங்கு பா.ஜனதா தொண்டர்களுடன் சோமண்ணா ஊர்வலமாக தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார். இதன் மூலம் பா.ஜனதா பலத்தை அவர் நிரூபித்தார். வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகரிலும், இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா கே.ஆர்.பேட்டையிலும், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மல்லேசுவரத்திலும், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
எடியூரப்பா மகன் விஜயேந்திரா நேற்று அடையாளத்திற்காக சிகாரிபுரா தொகுதியில் மனு தாக்கல் செய்தார். அவர் மீண்டும் நாளை (புதன்கிழமை) பா.ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிபுரா தொகுதியில் முன்னாள் மந்திரி எச்.டி.ரேவண்ணா, ஹாசனில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் ஸ்வரூப், மகாலட்சுமி லே-அவுட் தொகுதியில் கலால்துறை மந்திரி கோபாலய்யா ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர்.
421 பேர் மனு தாக்கல்
ஏற்கனவே 421 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 421 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 3 நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களில் ஆண்கள் 782 பேரும், பெண்கள் 60 பேரும் அடங்குவர்.
இதில் பா.ஜனதாவை சேர்ந்த 198 பேரும், காங்கிரஸ் சார்பில் 195 பேரும், ஜனதா தளம் (எஸ்) சார்பில் 86 பேரும், ஆம் ஆத்மி சார்பில் 50 பேரும், பகுஜன் சமாஜ் சார்பில் 17 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவரும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 161 பேர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளனர். பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத கட்சிகள் சார்பில் 134 பேர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
திருவிழா கோலம் பூண்டது
வேட்பு மனு தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 19-ந்தேதி அமாவாசை வருவதாலும் நேற்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய அரசு அலுவலகங்களில் குவிந்தனர். இதனால் அந்த அலுவலகங்கள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. மேலும் அப்பகுதிகளில் பலத்த போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.