பெங்களூரு புறநகரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் மர்மசாவு

பெங்களூரு புறநகரில் பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர். கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டதால் மூச்சுத்திணறி அவர்கள் இறந்தார்களா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-09-17 18:45 GMT

பெங்களூரு:-

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நேபாளத்தை சேர்ந்தவர்கள் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டப்பள்ளாப்புரா தாலுகா தொட்ட பெலவங்களா அருகே ஒலேயரஹள்ளி கிராமத்தில் ஒரு கோழிப்பண்ணையில் நேபாளத்தை சேர்ந்த காலே சரேரா (வயது 60) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் தனது மனைவி லட்சுமி சரேரா (55), உஷா சரேரா (40), பூல் சரேரா (16) ஆகியோருடன் கோழிப்பண்ணையில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இவர்கள் வேலைக்கு 8 நாட்களுக்கு முன்பு தான் நேபாளத்தில் இருந்து இங்கு வந்து தங்கியிருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அவர்கள் சாப்பிட்டு இரவில் தூங்கியுள்ளனர்.

செல்போன் அழைப்பை எடுக்கவில்லை

இந்த நிலையில் நேற்று காலை கோழிப்பண்ணை உரிமையாளர், காலே சரேராவிடம் பேச செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் மற்றொரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த, காலே சரேராவின் உறவினர் ஒருவருக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அந்த நபர் கோழிப்பண்ணைக்கு சென்று காலே சரேரா குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் கதவு பூட்டு துவாரம் வழியாக பார்த்துள்ளார். உள்ளே காலே சரேரா உள்பட 4 பேரும் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளனர்.

4 பேரும் பிணமாக கிடந்தனர்

இதுகுறித்து அவர் தொட்டபெலவங்கலா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு 4 பேரும் மர்மமான முறையில் பிணமாக கிடந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தொட்டப்பள்ளாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

4 பேரும் பிணமாக கிடந்த வீட்டுக்குள் கொசுவை விரட்ட கரிக்கட்டையால் புகைமூட்டம் போட்டிருந்த அடையாளங்கள் தென்பட்டன.

புகைமூட்டத்தால் பலியா?

எனவே கொசுவை விரட்ட அவர்கள் புகை மூட்டம் போட்டதும், கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு தூங்கியதால், ஆக்சிஜன் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பேரும் இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்