கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழப்பு
உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி,
கொரோனா தொற்று கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் பரவி உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகின் பல நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 4.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 5.3 லட்சம் பேர் இறந்தனர். இந்த பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க இந்தியாவில் சுமார் 220.67 கோடி டோஸ் கொரோனோ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில் ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம்பித்தது. கடந்த மாதம் டிசம்பர் 5-ம் தேதி வரை இரண்டு இலக்கங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தது. ஆனால் குளிர் காலம் ஆரம்பித்த பின்னர் பாதிப்பு அதிகமாக தொடங்கியது. கடந்த டிசம்பர் 31-ம் தேதி அன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 841 பேர் பாதிக்கப்பட்டனர். இது கடந்த 2021-ம் ஆண்டு மே மாதத்தில் பதிவான அளவில் 0.2 சதவீதம் ஆகும்.
இந்த நிலையில் இன்று இந்தியாவில் புதியதாக 605 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 பேர் கர்நாடகா மேலும் 2 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3,643 ஆகும். இது முந்தைய நாளை விட குறைவு ஆகும். தற்போது பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் குணமடைந்து வருகின்றனர்.