மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது; 21 வாகனங்கள் மீட்பு

சிக்கமகளூரு டவுனில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் மீட்டனர்.

Update: 2023-02-18 18:45 GMT

சிக்கமகளூரு:

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

சிக்கமகளூரு டவுன் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த 2 மாதங்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் தொடர்ந்து திருட்டு போயின. இதுதொடர்பாக ஏராளமான புகார்களும் போலீஸ் நிலையங்களில் குவிந்தன. இதையடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடும் நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் வாகன சோதனையும் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று காலையில் சிக்கமகளூரு டவுன் பேளூர் சாலையில் சிக்கமகளூரு டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

4 பேர் கைது

போலீசாரைக் கண்ட அவர்கள் மோட்டார் சைக்கிளை திருப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தங்களது வாகனங்களில் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், சதீஷ் ஆகியோர் என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை திருடி வந்ததும் தெரியவநெதது.

மேலும் இவர்களுக்கு உடந்தையாக இவர்களது கூட்டாளிகளான சிக்கமகளூரு டவுன் பகுதியைச் சேர்ந்த லட்சுமேஷா, ரகு ஆகியோர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுதம், சதீஷ், லட்சுமேஷா, ரகு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 21 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். இவ்வழக்கில் திறமையாக செயல்பட்டு திருடர்களை பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்