சிலுமே ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது

சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கிய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-11-27 18:45 GMT

பெங்களூரு:

வாக்காளர்கள் தகவல்கள் திருட்டு

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் மற்றும் வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கிய விவகாரம் குறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார் உள்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு இருந்தனர்.

அதே நேரத்தில் வாக்காளர்களின் தகவல்கள் திருடியது மற்றும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கிய விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகளை நியமித்திருப்பதுடன், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பெங்களூரு வாக்காளர்களின் தகவல்கள் திருடிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அடையாள அட்டை வழங்கினர்

அதே நேரத்தில் சிலுமே நிறுவனத்திற்கு வாக்காளர்களின் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைக்கும் பணி மற்றும் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மட்டுமே மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் சிலுமே நிறுவனம் வாக்காளர்களின் தகவல்களை திருடி, அரசியல் கட்சிகளுக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வாக்காளர்களின் தகவல்களை திருடுவதற்காக, சிலுமே நிறுவன ஊழியர்களுக்கு, வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான அடையாள அட்டையை மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி தான் வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடியதும் தெரியவந்தது.

4 அதிகாரிகள் கைது

இதையடுத்து, சிலுமே நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் விசாரணைக்கு ஆஜராகும்படி அல்சூர்கேட் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்திருந்தனர்.

அதன்படி, சிக்பேட்டை தொகுதி அதிகாரி பீமாசங்கர், சிவாஜிநகர் தொகுதி அதிகாரி சுகேல் அகமது, மகாதேவபுரா தொகுதி அதிகாரி சந்திரசேகர், ஆர்.ஆர்.நகர் தொகுதி அதிகாரி மகேஷ் ஆகிய 4 பேரும் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்கள்.

போலீஸ் விசாரணையின் போது, வாக்காளர்கள் தகவல்கள் திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்பட்டு இருந்ததுடன், அடையாள அட்டை வழங்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பீமாசங்கர், சுகேல் அகமது, சந்திரசேகர், மகேஷ் ஆகிய 4 பேரையும் அல்சூர்கேட் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் போது முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்