பெங்களூருவில் 4 சிறுத்தைகள் நடமாட்டம்; மக்கள் பீதி

பெங்களூரு கெங்கேரியில் 4 சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். அந்த சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2022-12-01 18:45 GMT

கெங்கேரி:

4 சிறுத்தைகள் சுற்றுவதாக...

பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பன்னரகட்டா பூங்காவை ஒட்டியுள்ள துர்ஹள்ளி வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தை வெளியேறி உள்ளது. அந்த சிறுத்தை கெங்கேரி, கும்பலகோடு, பி.டி.ஏ. காம்ப்ளக்ஸ், உத்தரஹள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்து வருகிறது. சிறுத்தை சுற்றித்திரியும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் கெங்கேரி, கும்பலகோடு, பி.டி.ஏ. காம்ப்ளக்ஸ், உத்தரஹள்ளி பகுதிகளில் ஒரு சிறுத்தை இல்லை, 4 சிறுத்தைகள் சுற்றித்திரிவதாகவும், இதனால் வெளியே வரவே பயமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஒரே இடத்தில் சுற்றாது

இதற்கிடையே பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியிலும் கடந்த 2 நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளது. அந்த சிறுத்தையை பிடிக்க எலகங்கா வனத்துறையினர் கூண்டு வைத்து உள்ளனர். மேலும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு நகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரியான ரவிசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு நகருக்குள் 4 சிறுத்தைகள் சுற்றித்திரிகிறதா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. ஆனால் வாய்ப்பு உள்ளது. பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து துர்ஹள்ளி வனப்பகுதி வழியாக சிறுத்தை வந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. சிறுத்தை பொதுவாக ஒரே இடத்தில் சுற்றித்திரியாது. சிறுத்தை வேறு இடத்திற்கு சென்று கொண்டே இருக்கும்.

குறிப்பிட்ட எல்லையில்...

பெரும்பாலும் மனிதர்களிடம் இருந்து தப்பிக்க தான் சிறுத்தை முயற்சி செய்யும். ஆனாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுத்தை சுற்றித்திரியும் பகுதிகளில் கூண்டு வைக்க உத்தரவிட்டு உள்ளேன்.

கூண்டிற்குள் நாயும் பொறியாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் சிறுத்தை கூண்டில் சிக்கும். பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர் பகுதியில் சுற்றித்திரிவது ஒரே சிறுத்தையாக இருக்க வாய்ப்பு இல்லை. சிறுத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் தான் சுற்றித்திரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறுத்தை நடமாட்டதால் மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள பள்ளிக்குள் ஒரு சிறுத்தை புகுந்து 2 பேரை தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்