மின்சாரம் தாக்கி 4 மாத கர்ப்பிணி பரிதாப சாவு

மூடிகெரே அருகே மின்சாரம் தாக்கி 4 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-10-13 18:45 GMT

சிக்கமகளூரு;


வீடு கிரகபிரவேஷம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஹங்கரவல்லி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஷாலினி. இவர்கள் அந்த பகுதியில் சொந்தமாக புதிய வீடு கட்டியிருந்தார். இந்த நிலையில் அவர்கள் புதிய வீட்டிற்கு கிரகபிரவேஷம் நடத்த முடிவு செய்தனர்.

இந்த நிலையில் வீட்டு கிரகபிரவேஷ விழாவிற்கு ஷாலினியின் அக்கா என்.ஆர்.புராவை சேர்ந்த சந்தியா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் வந்திருந்தனர். இதில் சந்தியா (வயது 25) 4 மாத கர்ப்பிணி ஆவார். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீட்டில் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

மின்சாரம் தாக்கியது

இந்த நிலையில் சமையலறையில் இருந்த ஜன்னல் கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வேலை செய்து கொண்டிருந்த கர்ப்பிணி சந்தியா ஜன்னல் கம்பியை பிடித்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாலினி தனது அக்காவை காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் அவர்மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற தினேஷ் மற்றும் உறவினர்கள் லட்சுமி, காமாட்சி ஆகிய 3 பேர்மீதும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் அவர்கள் அனைவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அவர்களை மீட்டு சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கர்ப்பிணி சாவு

இதில் கர்ப்பிணியான சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு ஆல்தூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த கர்ப்பிணி சந்தியாவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு தவறுதலாக கொடுத்ததால் ஜன்னலில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும், சோகமும் நிழவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்