120 பொருட்களை அடையாளம் காட்டி...உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை

குழந்தை அடையாளம் காணும் பொருட்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை குழந்தையின் தாய் ஹேமா எடுத்துள்ளார்.

Update: 2024-02-19 12:33 GMT

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது குழந்தையின் திறமையை வெளி உலகத்திற்குக் கொண்டு வர நினைத்த ஹேமா, தன் குழந்தை அடையாளம் காணும் பொருட்கள் தொடர்பாக வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோவை நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குழந்தையின் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யா உலக சாதனைக்கு தகுதியானவர் என்று முடிவு செய்து குழந்தைக்கு சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர். இதன் மூலம், 4 மாத குழந்தையான கைவல்யா உலக சாதனை படைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குழந்தையின் திறமையை உலகிற்கு காட்டுவதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டதாக குழந்தையின் தாய் ஹேமா தெரிவித்துள்ளார். இந்த சாதனைக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்