அரசு தேர்வில் முறைகேட்டை தடுக்க இணைய சேவை முடக்கம்- கவனம் பெற்ற மாநில அரசின் நடவடிக்கை

தேர்வில் முறைகேட்டை தடுக்க மாநில அரசு இணைய சேவையை முடக்கியது இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Update: 2022-08-21 12:26 GMT

Representative Image | PTI 

டீஸ்புர்,

அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற அரசுத் தேர்வுக்கான போட்டித் தேர்வில் முறைகேட்டை தடுக்க அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இன்று அரசின் பல்வேறு துறைகளில் குரூப்-3, குரூப்-4 பிரிவில் காலியாக உள்ள 27 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சுமார் 14 லட்சம் இளைஞர்கள் எழுதினர்.

தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக அசாம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, தேர்வு மையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலைமுதல் தேர்வு முடியும் வரையில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

அதேபோல் தேர்வு மையங்கள் அமைந்துள்ள வளாகங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்வர்கள் மட்டும் இன்றி தேர்வு அறை கண்காணிப்பாளர்களும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எலக்ட்ரானிக் உபகரணங்கள் எதையும் எடுத்துச்செல்லக்கூடாது என்ற விதியோடு, தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வர்கள் தேர்வுக்கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு தேர்வில் முறைகேட்டை தடுக்க அசாம் அரசு இணைய சேவை துண்டித்தது இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்