4 கையெறி குண்டுகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு-போலீஸ் கமிஷனர் தயானந்த் பேட்டி
பெங்களூருவில் சிக்கிய 4 கையெறி குண்டுகளும் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதிகளுடன் இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளதாகவும் போலீஸ் கமிஷனர் தயானந்த் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, ஆக.1-
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தடயவியல் ஆய்வு
பெங்களூருவில் பதுங்கி இருந்த 5 பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகள், வாக்கி-டாக்கிகள், வெடிப்பொருட்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 5 பேருக்கும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததுடன், நாசவேலையில் ஈடுபட சதி திட்டமும் தீட்டி இருந்தார்கள். இதுதொடர்பாக ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
எனவே கைதானவர்கள் பற்றி தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. கைதான பயங்கரவாதிகளிடம் சிக்கிய 4 கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலருக்கு தொடர்பு
தடயவியல் அறிக்கை வந்த பிறகு தான், அந்த கையெறி குண்டுகள் எந்த வகையை சேர்ந்தது, எங்கு தயாரிக்கப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும். பயங்கரவாதிகள் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தது பற்றிய தகவல் இல்லை. பயங்கரவாதி ஜுனைத்துடன் மேலும் சிலர் தொடர்பில் இருந்ததற்கான தகவல்கள் கிடைத்தது. கைதான 5 பேரும் விசாரணையின் போது அதுபற்றி தெரிவித்துள்ளனர்.
அதனால் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடிக்கவும் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. அதற்கான வேலைகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். கைதான 5 பயங்கரவாதிகளும் பெங்களூருவில் எங்கெல்லாம் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டனர் என்பது பற்றி பகிரங்கமாக தெரிவிக்க இயலாது. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக அந்த தகவல்கள் வெளியே சொல்ல இயலாது.
எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
பெங்களூருவில் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுதொடர்பான புகார்களும் வருகிறது. சைபர் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சைபர் போலீஸ் நிலையங்களில் அதிநவீன வசதிகள், தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறோம். சைபர் கிரைம் நடந்ததும் உடனடியாக 112 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
அவ்வாறு புகார் அளித்தால், உடனடியாக மர்மநபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி, பொதுமக்களின் பணத்தை பாதுகாக்கலாம். ஆனால் உடனடியாக 112 என்ற எண்ணுக்கு புகார் அளிப்பதில்லை. சைபர் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.