பாழடைந்த மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து 4 பேர் சடலமாக மீட்பு - அதிர்ச்சி சம்பவம்

பாழடைந்த பயன்பாடற்ற மருத்துவமனையில் இருந்து 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-30 07:58 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் கண்டிவாலி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் பாழடைந்த கைவிடப்பட்ட மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை கட்டிடத்தில் கிரண் தேவி என்ற பெண் தனது இரு மகள்களான முஸ்கன் மற்றும் பூமி ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கைவிடப்பட்ட அந்த மருத்துவமனை கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது கிரண் தேவி மற்றும் அவரது மகள் முஸ்கன் ஒரு அறையில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மற்றொரு மகளான பூமி அங்குள்ள மற்றொரு அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவரின் அருகே ஒரு ஆண் நபரும் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

பின்னர், 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாயையும் இரு மகள்களையும் கொலை செய்துவிட்டு அந்த ஆண் நபர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அந்த ஆண் நபர் பெயர் ஷிவ்தயால் சென் என்பதும் அவர் டிரைவராக வேலை செய்துவந்ததும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சில கடிதங்களை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்