2024- ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்: இந்தியாவில் தென்படுமா?

நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும்.

Update: 2024-01-04 08:46 GMT

இந்தூர்,

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் போது சந்திரன் சூரிய ஒளிவட்டத்தின் பெரும்பகுதியை மறைத்து, சந்திரனின் விளிம்புகளைச் சுற்றி சூரிய ஒளி போன்ற ஒரு வளையம் மட்டுமே தெரியும். அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வந்து, சூரியனின் நேரடிக் கதிர்கள் சந்திரனை ஒளிரவிடாமல் தடுக்கும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் நான்கு கிரகணங்கள் ஏற்படும், இதில் ஒரு முழு சூரிய கிரகணம் அடங்கும், ஆனால் அவை எதுவும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்று மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி டாக்டர் ராஜேந்திரபிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேந்திரபிரகாஷ் குப்தா கூறியதாவது,

நடப்பு ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் தேதி ஏற்படும். இந்த கிரகணம் இந்தியாவில் காணமுடியாது, ஏனெனில் இந்த நிகழ்வு பகல் நேரத்தில் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் யாராலும் பார்க்க இயலாது. மேலும், செப்டம்பர் 18-ம் தேதி காலை பகுதி சந்திர கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இந்த கிரகணம் புலப்படாது.

அக்டோபர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு தென்படாது. இந்த வளைய சூரிய கிரகணம் 7 நிமிடங்கள் மற்றும் 21 வினாடிகள் நீடிக்கும் மற்றும் அதன் உச்சத்தில், சூரியனின் 93 சதவீதம் மூடப்பட்டிருக்கும், இதன் காரணமாக பூமியில் இருந்து ஒரு பளபளப்பான வளையம் போல் தோன்றும்.

கடந்த 2023 ஆம் ஆண்டில், நான்கு வானியல் நிகழ்வுகள் நடந்தன, இதில் முழு சூரிய கிரகணம், சந்திர கிரகணம், வளைய சூரிய கிரகணம் மற்றும் பகுதி சந்திர கிரகணம் ஆகியவை அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்