பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பரிதாப சாவு
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பிறந்த 4 நாட்களே ஆன ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.;
மைசூரு:-
உயர் சிகிச்சை
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா கண்ணஹல்லி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவு (வயது30). இவரது மனைவி லீலா(25). லீலாவுக்கு கடந்த 6-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் 9-ந்தேதி திடீரென குழந்தைக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து குழந்தையை பேகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தையின் உடலை மோசமாக இருப்பதாகவும், உயர் சிகிச்சைக்காக எச்.டி.கோட்டை தாலுகா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படியும் கூறினர். இதையடுத்து அவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போனை எடுக்கவில்லை. இதையடுத்து பல்வேறு வழிமுறைகளில் ஆம்புலன்ஸ் டிரைவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். இறுதியாக ஆம்புலன்ஸ் டிரைவர் வருவதாக கூறினார். ஆம்புலன்ஸ் வந்ததும், அதில் குழந்தையை ஏற்றினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் எச்.டி.கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தது.
குழந்தை சாவு
இந்நிலையில் அந்த ஆம்புலன்சில் முறையான ஆக்சிஜன் வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது. இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர், ஆம்புலன்ஸ் வரத்தாமதமானதால், குழந்தை இழந்ததாக கூறி போராட்டம் நடத்தினர். இதை அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி, மகாதேவு, லீலா தம்பதியை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை விட்டனர். மேலும் இது குறித்து குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் எச்.டி.கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.