சிக்கிம்: வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து - 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சிக்கிமில் சாலையோர பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.;
காங்டோக்,
மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.