ஒரே வாரத்தில் 3-வது முறை; குடகு, தட்சிண கன்னடாவில் மீண்டும் நிலநடுக்கம்
ஒரே வாரத்தில் 3-வது முறையாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.;
மங்களூரு;
தட்சிணகன்னடா, குடகு
கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்து உருண்டோடின. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் சில பகுதியில் வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டன.
குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மடிகேரி தாலுகா பராஜி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் இருந்த வீட்டு சுவரின் ஒரு பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
3-வது முறையாக நிலடுக்கம்
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுள்ளியா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், குடகு மாவட்டத்தில் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் சாலையில் தஞ்சம்
அதாவது தட்சிண கன்னடாவில் நேற்று மீண்டும் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. அதிகாலை 1 மணியளவில் சுள்ளியா, சம்பாஜே, கல்லுகுந்தி கிராமங்களில் 5 வினாடிகள் மட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினர். எனினும், சில பகுதியில் இந்த அதிர்வால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு சிதறின.
இதற்கிடையே பீதியடைந்த மக்கள் பிள்ளைகளை தூக்கி கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் குடகு மாவட்டத்தில் செம்பு, கோனட்கா பகுதிகளில் பலத்த சத்தத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 1.8 ஆக பதிவானது. மேலும், செம்பு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோ தூரத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 2ஆக பதிவானது.
நிலநடுக்கத்தை கணக்கீடு செய்வதற்காக பேரிடர் குழுவினர் குடகு மாவட்டத்தில் முகாம் அமைத்துள்ளனர்.
பாதிப்பு ஏற்படாது
கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கே.எஸ்.டி.எம்.ஏ.) கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நில நடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவானதை உறுதி செய்து இருந்தது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5 ஆக பதிவாகி உள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், கர்நாடகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 2.5 ஆக பதிவாகி உள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனவே மக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்றார்.