டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் போலீசார் வழக்கு
தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 'மோடியை அகற்றுங்கள், நாட்டை காத்திடுங்கள்' என்ற வாசகங்கள் அடங்கிய அந்த போஸ்டர்களால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த போஸ்டர்களை போலீசார் அகற்றி வருகின்றனர். அந்தவகையில் சுவர்களிலும், மின் கம்பங்களிலும் ஒட்டப்பட்டிருந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போஸ்டர்களை போலீசார் கிழித்து எறிந்தனர்.
அதேநேரம் ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான போஸ்டர்களுடன் வந்த வாகனம் ஒன்றை, போஸ்டர்களுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்தில் நகரின் பல போலீஸ் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.