டெல்லியில் சிறுமிகள் ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் அதிரடி கைது; 100 வழக்குகளும் பதிவு
டெல்லியில் சிறுவர்-சிறுமிகள் ஆபாச பட குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு போலீசார் மிகப்பெரிய சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்
புதுடெல்லி,
டெல்லியில் சிறுவர்-சிறுமிகள் ஆபாச பட குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு போலீசார் மிகப்பெரிய சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். 'மசூம்' என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் பயனாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிறுவர்-சிறுமிகள் ஆபாச பட விவகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் தேசிய குற்ற ஆவண காப்பகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அதன் அடிப்படையில் இந்தியாவில் சிறுவர்-சிறுமிகள் ஆபாச படங்களை பகிர்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுபவர்கள் குறித்த தகவல்களை அந்த நிறுவனம் இந்தியாவுக்கு வழங்கி வருகிறது. அப்படி இந்த நிறுவனம் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.