'ஸ்வாநிதி' திட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.3,592 கோடி கடன் மத்திய மந்திரி தகவல்

.சுமார் 12 லட்சம் தெருவோர வியாபாரிகள் தங்களது முதல் தவணை கடனை திருப்பி செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

Update: 2022-07-08 00:09 GMT

புதுடெல்லி,

கொரோனாவால் வேலையிழந்த சாலையோர வியாபாரிகள் மீண்டும் வேலையை தொடங்குவதற்கு வசதியாக 'ஸ்வாநிதி' திட்டம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், ஓராண்டு காலத்துக்கு எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.10 ஆயிரம் மூலதனக் கடன் வழங்கப்படுகிறது. இதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் அடிப்படையில் 2-வது மற்றும் 3-வது தவணைகளில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இது நாடு முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதால், வெற்றியை கலாசார நிகழ்வுகளுடன் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கொண்டாட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனை அந்த துறையின் மந்திரி ஹர்தீப்சிங் பூரி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் இதுவரை 53.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 36.6 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டு அதில் 33.2 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், வழங்கப்பட்ட கடன் தொகை ரூ.3,592 கோடி என்றும் கூறினார். சுமார் 12 லட்சம் தெருவோர வியாபாரிகள் தங்களது முதல் தவணை கடனை திருப்பி செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

திட்டத்தின் வெற்றிக் கொண்டாட்ட விழா நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை 75 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கோவையில் 18-ந் தேதியும், நாகர்கோவிலில் 22-ந் தேதியும், சென்னையில் 23-ந் தேதியும் விழா நடத்தப்படுகிறது. புதுச்சேரியில் 29-ந் தேதி விழா நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்