தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு; போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் பேட்டி
தத்தா ஜெயந்தி விழாவையொட்டி சிக்கமகளூருவில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:
தத்தா ஜெயந்தி விழா
சிக்கமகளூரு மாவட்டம் சந்திரதிரிகோண மலையில் பாபாபுடன்கிரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள். மேலும் தத்தா கோவிலை இரு சமூக மக்களும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் பாபாபுடன் கிரி கோவிலில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தத்தா ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக இந்து அமைப்பினர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். தத்தா ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் தத்தா ஜெயந்தி விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேற்று சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
இந்த கூட்டம் முடிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிக்கமகளூரு பாபாபுடன் கிரி கோவிலில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை 3 நாட்கள் தத்தா ஜெயந்தி விழா நடக்க உள்ளது. 6-ந்தேதி அனுசியா ஜெயந்தியையொட்டி சிக்கமகளூரு நகரில் இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்ல உள்ளனர். 7-ந்தேதி எம்.ஜி.ரோட்டில் ஊர்வலம் நடக்க உள்ளது. 8-ந்தேதி பாபாபுடன் கிரி மலையில் தத்தா பாதத்தை தரிசனம் செய்ய உள்ளனர். இதில் கலந்துகொள்வதற்காக மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 6-ந்தேதி முதல் 9-ந்தேதி காலை 10 மணி வரை சந்திரதிரிகோண மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
3,500 போலீசார் பாதுகாப்பு
தத்தா ஜெயந்தியையொட்டி சிக்கமகளூரு, சந்திரதிரிகோண மலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சிக்கமகளூரு நகரில் 11 இடங்களிலும், மாவட்டத்தில் 28 இடங்களிலும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூருவில் பல இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீசாரின் நடவடிக்கைக்கு பக்தர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.