உப்பள்ளியில் கனமழைக்கு 35 வீடுகள் சேதம்; மழை பாதித்த பகுதிகளில் மேயர் ஆய்வு
உப்பள்ளியில் கனமழைக்கு 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் மழை பாதித்த பகுதிகளில் மேயர் ஈரேஷா அஞ்சடகேரி ஆய்வு செய்தார்.;
உப்பள்ளி;
கனமழை
கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக வடமேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. அதன்படி தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இந்த மழைக்கு வீடுகள் இடிந்து விழுந்தும், பல்வேறு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றுமுன்தினம் உப்பள்ளியில் 13.5 மி.மீ. மழை, சப்பியில் 10.4 மி.மீ., சிரகுப்பியில் 19.2 மி.மீ., பஹாட்டியில் 15.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அஞ்சடேகேரியில் பசப்பா கடிகேப்பா மொரபாடா என்பவரின் கொட்டகை இடிந்து விழுந்து எருமை மாடு செத்தது. 2 காளைகள், ஒரு மாடு காயம் அடைந்தன.
உன்கல் பாதாமி ஓனியில் பசவராஜா என்பவரது கடையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்ற சித்னா கவுடா என்பவரின் தள்ளுவண்டி மற்றும் ஹனுமந்த கவுடாவின் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தன.
35 வீடுகள் சேதம்
உப்பள்ளி புறநகரில் பெய்த கனமழைக்கு கிராமப்புறங்களில் உள்ள 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தாசில்தார் பிரகாஷ் நாஷி தெரிவித்தார்.
உப்பள்ளி தேஷ்பாண்டே நகர், காட்டன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை மேயர் ஈரேஷா அஞ்சடகேரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், மழை சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.