தமிழகத்தில் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரெயில் நிலையங்கள்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-02-26 07:47 GMT

புதுடெல்லி,

நாட்டில் முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் ரெயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் ரெயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி, மின்படிக்கட்டு, உள்ளூர் தயாரிப்பை முன்னிலைப்படுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடை அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன. நாடு முழுவதும் உள்ள 1,318 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரெயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன.

டெல்லியில் நடந்த இந்த விழாவில் மத்திய மந்திரிகள் அஸ்வின் வைஷ்ணவ், ராவ் சாககேப் பாட்டில் தன்வே, தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடு முழுவதும் அந்தந்த மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் விழாவில் கலந்து கொண்டனர். பரங்கிமலையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்