300 முறை தோப்புக்கரணம்... ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு

300 முறை தோப்புக்கரணம் போடவைத்து சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தியதால் மருத்துவ கல்லூரி மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-26 12:54 GMT

கோப்புப்படம் 

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள துங்கார்பூர் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் சிலர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே அந்த மாணவரை சீனியர்கள் ராகிங் செய்து வந்துள்ளனர். ஆனால் இது குறித்து அவர் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த மே மாதம் 15-ந்தேதி கல்லூரிக்கு அருகில் முதலாமாண்டு மாணவரை தோப்புக்கரணம் போடச் சொல்லி சீனியர் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அந்த மாணவரை அவர்கள் சுமார் 300 முறைக்கும் மேல் தோப்புக்கரணம் போட வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மாணவரின் சிறுநீரகத்தில் அதிக அளவிலான அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அந்த மாணவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 4 முறை டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 20-ந்தேதி கல்லூரி நிர்வாகத்திற்கு ஆன்லைன் மூலமாக ஒரு புகார் கடிதம் வந்துள்ளது. அதன் பிறகே, இந்த ராகிங் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, 7 மாணவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 2-ம் ஆண்டு படித்து வரும் 7 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவர் மீண்டும் கல்லூரிக்கு சென்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்